நமக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி நடக்குதுன்னு ஒருத்தர் நினைக்குறது சாதாரணம்தான். ஆனால் ஒரு பெரிய மக்கள் கூட்டமே இந்த புலம்பலை சொன்னால் அதை அவ்வளவு எளிதில் கடந்துவிட்டு செல்ல முடியாது. மக்களின் பொழுதுபோக்குகளில் ஒன்றான சினிமா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது அனைவருக்கும் தெரியும். அதிலும் தமிழ் சினிமா ஐ.சி.யூவில் அட்மிட் செய்து பல நாட்கள் ஆகிவிட்டது.
டிஜிட்டல் மயமான பிறது ஒரு படத்தை எடுப்பது என்பது சுலபமாகிவிட்டது, ஆனால் அதை திரைக்கு கொண்டு வரும் வழிகள் சபரிமலை பெரிய பாதையைவிட மிக மிக கடுமையானதாக மாறிப்போனதுதான் இந்த அழிவிற்கு ஆரம்பமாக பார்க்கப்படுகிறது. Qube, UFO போன்ற நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் வசூலிக்கும் பணத்தை வைத்து மெகா பட்ஜெட் படங்களையே தயாரிக்கலாம். இப்படி பாடுபட்டு இருக்கும் வீடு, கார், நகை எல்லாத்தையும் விற்றுவிட்டு படத்தை ரிலீஸ் செய்யும்போது மக்களிடையே படத்தை கொண்டு செல்ல விளம்பரம் அத்தியாவசியமாகிறது. இந்த இடத்தில்தான் மிச்சமிருக்கும் தயாரிப்பாளர்கள் கழுத்தில் கயிற்றை மாட்டி தொங்கவிடுகிறது விளம்பர ஏஜென்சிகள்.
ஸ்கை கமர்ஷியல் (SKY Commercial) என்ற விளம்பர நிறுவனம் மீது RS Infotainment மேலாளர் மகேஷ் என்பவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதர்வா, அமலா பால் நடிப்பில் வெளியான “முப்பொழுதும் உன் கற்பனைகள்” படத்தை தயாரித்த நிறுவனம் தான் RS Infotainment. இப்படத்தின் வெளியிட்டு நேரத்தில் படத்தை மக்களிடையே விளம்பரம் செய்து தருவதாக கூறி இந்நிறுவனத்தில் நுழைந்தாராம் SKY Commercial நிறுவனர் அலமேலு என்ற பெண். படமும் ரிலீசானது எதிர்பார்த்த வெற்றி படத்துக்கு வரவில்லை என்று RS Infotainment நிறுவனமும் அடுத்த படத்தை தயாரிக்க சென்றுவிட்டது.
படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்று RS Infotainment நிறுவனம் பார்க்கும்போதுதான் இவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததாம். படத்திற்கு விளம்பரம் செய்து தருவதாக வந்த அலமேலு பல லட்ச ரூபாய்க்கு போலி பில்களை கொடுத்து விளம்பரம் செய்யாமலே செய்ததாக ஏமாற்றியது தெரிய வந்ததாம். இதனை சட்ட ரீதியாக எதிர் கொள்வது என்று முடிவெடுத்த பின்னர் அவரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டதற்கு நான் ஒரு பெண் உங்கள் நிறுவனத்தின் பெயரை கெடுத்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளாராம். இதனால் அமைதி காத்து வந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது இ3 தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்து செக்ஷன் 409/420 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அலமேலுவிடம் விசாரித்தபோது, RS Infotainment நிறுவனம்தான் எனக்கு 40 லட்சம் பண பாக்கி வைத்திருப்பதாகவும் இது குறித்து சைபர் க்ரைம் போலீசிடம் புகார் அளித்திருப்பதாகவும் மேலும் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதிடம் இதுபற்றி கூறியதற்கு இது சிவில் கேஸ் நீங்க கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டதாகவும் அலமேலு கூறியுள்ளார்.
பத்திரிக்கையாளர் ஒருவர் சைபர் க்ரைமில் அலமேலு கொடுத்த புகார் நகலை கேட்டதற்கு இதோ தருகிறேன் என்று கூறி இதுவரை அவர் தரவில்லை மேலும் பத்திரிக்கையாளர்களை திசை திருப்பி இவர் சைலண்டாக இந்த விவகாரத்தை முடிக்க நினைக்கிறாரா என்ற சந்தேகமும் வருகிறது.
நல்ல படங்களை சினிமாவுக்கு தரவேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ் சினிமாவில் நுழையும் தயாரிப்பாளர்களை இப்படிபட்ட விளம்பர ஏஜென்சிகள் இருப்பதையும் சுரண்டிவிட்டு துரத்திவிடுவது வழக்கமாகி வருகிறதாம். இல்லாத ஒரு மீடியாவை இருப்பதாக காட்டி பல லட்சம் கொள்ளையடிக்கிறாங்க என்ற குற்றச்சாட்டும் இருக்கிறதாம். தயாரிப்பாளர்கள் சங்கமே முன் வந்து இதுபோன்ற நம்பகதன்மை இல்லாத நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக தயாரிப்பாளர்களும் கூறுகின்றனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் கேட்கும்போது, பட விளம்பரங்களில் நாங்கள் பல கட்டுப்பாடுகளை கொண்டுவந்தாலும் இந்த மாதிரி ஏஜென்சிகளை நம்பி பல லட்சங்களை தயாரிப்பாளர்கள் செலவிடும்போது நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறுகிறார்கள். இவங்க சொல்றதும் சரிதானே.. யோசிச்சு, எடுத்த படத்துக்கு எவ்வளவு விளம்பரம் செய்யனும் அதை எப்படி செய்யனும்னு என்று தயாரிப்பாளர் சங்கத்துல ஆலோசனை நடத்தினா இந்த பஞ்சாயத்து ஏன் வரப்போவுது சொல்லுங்க.