BREAKING NEWS
Search

சீமராஜாவுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி!

240

சினிமாவில் வாய்ப்புத்தேடி எத்தனையோ பேர் நுழைந்தாலும் அத்தனை பேருக்கும் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் ரசிகர்களின் மனதில் பதிவது என்பது கூட ஒருவகையில் அதிர்ஷ்டம் தான்.. அப்படி ‘தர்மதுரை ‘ படத்தில் விஜய்சேதுபதியின் தம்பியாக, அவரது சட்டையை பிடித்து இழுக்கும் வில்லன் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் தனது உருவத்தை பதியவைத்தவர் ரகு.

நடிப்பின் மீதான ஆசையால் ஜப்பானில் சாப்ட்வேர் இஞ்சினியராக ஐந்து வருடம், தான் பார்த்துவந்த வேலையை உதறிவிட்டு சென்னைக்கு வந்த ரகு பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் நடிப்பு பயிற்சிக்காக சேர்ந்தார்.. முதல் வாய்ப்பாக பூஜை படத்தில் விஷாலின் நண்பர்களில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், தர்மதுரை படத்தில் விஜய்சேதுபதியின் தம்பியாக நடித்தபின் தான் பலரும் இவரை அடையாளம் கண்டுகொள்ளும் விதமாக ஒரு வெளிச்சம் கிடைத்தது.

“அந்தப்படத்தில் என்னை தவிர மற்ற அனைவரும் மிகப்பெரிய ஜாம்பவான்கள்.. நான் மட்டும் தான் புது ஆள்.. அதிலும் முதல் காட்சியே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து சண்டைபோடும் காட்சி என்பதால் பதட்டமாக இருந்தது.. மேலும் ஆரம்பத்தில் அந்த காட்சி காமெடியாக இருந்தாலும் க்ளைமாக்சில் சேது அண்ணாவையே தாக்கும் அந்த வில்லத்தனம் தான் என்னை ரசிகர்களிடம் ஓரளவுக்கு அறிமுகம் செய்துவைத்தது.. சேது அண்ணா தான் “பயப்படாம அடி” என ஊக்கம் கொடுத்தார்.. இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சீனுராமசாமி சாருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.” என்கிறார் ரகு.

தற்போது பரியேறும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ரகு, சிவகார்த்திகேயனுடன் ‘சீமராஜா ‘ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தர்மதுரை படம் மூலமாகத்தான் பரியேறும் பெருமாள் வாய்ப்பு தேடிவந்ததாம். அதில் கிராமத்து கேரக்டருக்காக அழைத்தபோது மாடர்ன் லுக்கில் வந்து நின்ற ரகுவை பார்த்து ஷாக் ஆனாராம் இயக்குனர் மாரிசெல்வம். ஆனால் படப்பிடிப்பின்போது பக்காவான கிராமத்து கெட்டப்பில் ரகு வந்து நின்றதும் தான், இயக்குனருக்கு முழு நம்பிக்கை வந்ததாம். இந்தப்படத்தில் ஆனந்தியின் அண்ணனாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரகு.

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நாயகி பிரியா பவானி சங்கரின் ப்ரண்ட் ஆக நடித்துள்ளார் ரகு. இதற்குமுன் பாண்டிராஜின் ‘கதகளி’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ரகுவுக்கு 2டி தயாரிப்பாளர் ராஜசேகர் மூலமாக இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு உருவானது. “கிட்டத்தட்ட 30 நட்சத்திர நடிகர்கள் கொண்ட கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்தது போன்ற உணர்வு அந்தப்படத்தில் நடித்தபோது ஏற்பட்டது. கார்த்தி அண்ணாவுடன் இணைந்து நடித்த காட்சிகள் கலகலப்பாக இருந்தது” என்கிறார்.

ரஜினி முருகன் படத்திலேயே இவர் நடிக்கவேண்டியது.. ஆனால் ரொம்ப சின்ன ரோல் என்பதால், உனக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என கூறினாராம் பொன்ராம் சொன்னபடி ‘சீமராஜா’ படத்திற்காக அழைத்தவர், “நீ ஒல்லியாக இருக்கிறாய் இந்த கேரக்டருக்கு நன்றாக உடம்பை ஏற்றவேண்டும். அப்படி வந்தால்தான் உனக்கு வாய்ப்பு” என கண்டிஷன் போட்டுவிட்டாராம். அதற்காக ஜிம், உடற்பயிற்சி என உடம்பை ஏற்றி, சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து ஆளே மாறியதை பார்த்து இயக்குனர் பொன்ராம் ரொம்பவே சந்தோஷப்பட்டாராம். ஆனால் சீமராஜா படத்தில் என்ன கேரக்டர் என்பதை சொன்னால், கதை கசிந்துவிடும் என்பதால் அதை பற்றி மனிதர் மூச்சுக்கூட காட்டவில்லை.

நடிப்பில் சிவாஜி, விஜய்சேதுபதி இவர்களை ரோல்மாடலாக எடுத்துக்கொண்டுள்ளாராம் ரகு.. “அவர்கள் சின்னவேடம் என்றாலும் தயங்காமல் நடித்தவர்கள்.. அதில் தங்களது நடிப்பு பேசப்படும்படியாக செய்தவர்கள்.. அதேபோல நானும், நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என பிடிவாதம் காட்டாமல், எந்த கேரக்டராக இருந்தாலும் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறதா என பார்த்தே ஒப்புக்கொள்வேன்” என்கிறார்.

‘நெருப்புடா’ மற்றும் பாலாஜி சக்திவேலின் ‘யார் இவர்கள்’ படங்களை தயாரித்த சந்திரா ஆர்ட்ஸ் ரகுவின் சகோதரர் நிறுவனம் என்பதால் கூடியவிரைவில் அந்த நிறுவனத்தின் புதிய படத்தில் மெயின் ரோலில் நடிக்க இருக்கிறாராம் ரகு.. அதற்கான கதை தேடல் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கிறது. அதில் நீங்கள் ஹீரோவா, வில்லனா என கேட்டால், எனக்கு செட்டாக கூடியது எதுவாக இருந்தாலும் அதில் நடிப்பேன்” என்கிறார் ரகு நம்பிக்கையாக.Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *