BREAKING NEWS
Search

கருணாநிதியின் உடல் மறைந்தாலும் அவரது சாதனைகள் நிலைத்து நிற்கும் – பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் புகழஞ்சலி

373

பாரத தேசத்தின் கடைகோடி மாநிலமான தமிழகத்தின் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த திரு. கருணாநிதி தனது 14 வயது முதல் தனது சளைக்காத உழைப்பால் ஒரு போராளியாய், ஒரு இலக்கியவாதியாய், கவிஞனாய், எழுத்தாளனாய், பத்திரிக்கை ஆசிரியராய், திரைப்பட வசனகர்த்தாளராய், நாடக ஆசிரியராய், மாநிலத்தின் முதலமைச்சராய், எதிர்க்கட்சி தலைவராய், ஒரு அரசியல் கட்சியின் தனிப் பெரும் தலைவனாய் ஐம்பது ஆண்டுகால அடையாளமாய் நேரு முதல் மோடி வரை பதினைந்து பிரதமர்களையும், ராஜேந்திரபிரசாத் முதல் ராம்நாத்கோவிந்த்வரை பதினாலு குடியரசுத் தலைவர்களையும் கண்ட முதுபெரும் மற்றும் முப்பெறும் கலைஞர் கருணாநிதி காலமாகி விட்டார் என்ற செய்தி கேட்டு கலங்கி போனேன்.

கிட்டத்தட்ட மத்திய அரசால் சவலைப் பிள்ளை போல் பாவிக்கப்பட்ட தமிழ் நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னால் இந்த தலைவர் கருணாநிதியின் உத்தரவால்தான் தமிழகத்தில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டு, இன்றும் குறிப்பிட்டு சொல்லும்படியாக அந்த திட்டங்கள் எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. ஆம்.. அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் 1969ல் முதல்வராக பொறுப்பேற்ற திரு. கருணாநிதி ஏழைகளுக்கு உதவும் வகையில் இலவசக் கல்வி, மானிய விலையில் மின்சாரம், ஏழைகளுக்கு இலவச மின்சாரம் உள்பட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

* முதல் மாற்றமாக மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

* அண்ணா ஆட்சிக்காலத்தில் 1967-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட வடிவம் அளிக்கப்பட்டது.

* இருமொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டது. இதன்படி, தமிழகப் பள்ளிகளில் கட்டாய இந்தியை அகற்றிவிட்டு, தமிழ், ஆங்கிலம் எனும் இருமொழிகள் நீடிக்கும் என்ற தீர்மானம் 1968ல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

* தனியார் வசம் இருந்த பேருந்துகள் முதன்முறையாக நாட்டுடைமையாக்கப்பட்டன. அப்போது அண்ணாதுரையின் அரசில் கருணாநிதி போக்குரவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

* 1969ல் முதல்வராக இருந்த அண்ணாதுரை மறைந்துவிட, முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றார்.1969 முதல் 1976 வரையிலான அவரது ஆட்சிக் காலத்தில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

* கை ரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டன. சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டன.

* குடிசை மாற்று வாரியம் என்ற அமைப்பை உருவாக்கி பெருநகரங்களில் குடிசைகள் அகற்றப்பட்டு, அங்கு வாழும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன.

* சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை மாநிலத்தின் ஆளுநர்களே பெற்று இருந்தனர். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் போராடி, சுதந்திர தினத்தில் கொடி ஏற்றும் உரிமையை முதல்வர்களுக்கு பெற்றுத் தந்தவர் கருணாநிதி.

* பிச்சைக்காரர், தொழு நோயாளர் மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப்பட்டன

* கோவில்களின் ஆதரவில் ஆதரவற்றோருக்கு பாதுகாப்பு தரும் கருணை இல்லங்கள் அமைக்கப்பட்டன

* கண்ணொளி திட்டத்தின் கீழ் இலவச கண் சிகிச்சை முகாம்கள் – அவர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

* பண்டிகை நாட்களில் ஏழைகளுக்கு இலவச அரிசி – ஆடைகள் வழங்கப்பட்டன.

* ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்தனி துறைகள் அமைக்கப்பட்டது.

* போலீசார் தேவைகள் உணர இந்தியாவிலேயே முதன் முதலாக போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டது.

* தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் விளக்கு வசதி.

* அரசு ஊழியர் குடும்பப் பாதுகாப்பு திட்டம். (பணியில் இறந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கபப்டும் என்று அறிவித்தார்)

* சிகப்பு நாடா முறை ரகசியக் குறிப்புமுறை ஒழிப்பு.

* ஊனமுற்றோர் மறுவாழ்வுத் திட்டம்.

* பெண்களுக்கு சொத்துரிமை.

* மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம்.

* ஏழைப் பெண்கள் திருமண உதவித்திட்டம்.

* அரசுப் பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு ஒதுக்கீடு.

* கலப்பு குடும்பத்து பெண்களுக்கு பேறுகால நிதியுதவி.

* சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதிய உயர்வு.

* புதிய பல்கலைக் கழகங்கள் – நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம், சென்னையில் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம், சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகம்.

* மொழிப்போர்த் தியாகிகளுக்கு ஓய்வூதியம்.

* மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை.

* ஆதி திராவிடர்களுக்கு இலவச வீடுகள்.

* மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு.

* மாநில திட்டக்குழு அமைத்தல்.

* ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகைத் திட்டம், அரசு நிறுவனங்களின் பணியிடங்களில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

* கிராமப்புற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நமக்குநாமே திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப்புற மேம்பாட்டுக்காக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது. இவையிரண்டும் கிராமப்புறங்களுக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் பெற உதவின.

* உழவர் சந்தைகளை தமிழகத்தின் பல பகுதிகளிலும் திறந்து வைத்தவர் மு.கருணாநிதி.

* சமத்துவபுரம் திட்டத்தைக் கொண்டு வந்து தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சமத்துவபுர குடியிருப்புகளை கருணாநிதி உருவாக்கினார்.

* பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டுடன் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

* பள்ளி மாணவர்கள் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

* 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் தமிழ் இணைய மாநாடு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, கணினித் தமிழில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

* மினி பஸ் இயக்கும் திட்டத்தை திமு.க அரசு நடைமுறைப்படுத்தியது.

* 2006ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தேர்தல் வாக்குறுதிப்படி 1 கிலோ அரிசி 2 ரூபாய், விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் 7000 கோடி ரூபாய் தள்ளுபடி, சத்துணவுத் திட்டத்தில் வாரம் இரண்டு முட்டைகள் ஆகிய திட்டங்களை நிறைவேற்றினார்.

* தேர்தல் வாக்குறுதியின்படி , குடும்ப அட்டைகள் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவசமாக கலர் டிவி வழங்கப்பட்டது.

* ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

* அண்ணா நூற்றாண்டு தொடக்க தினமான 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் 1 கிலோ அரிசி 1 ரூபாய் என்ற விலையில் மாதம் 20 கிலோ அரிசி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டது. இது தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

* கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவத்திற்கு முந்தைய 3 மாதங்களும் பிந்தைய 3 மாதங்களும் தலா 1000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் மகப்பேறு உதவித் திட்டம் கொண்டு வரப்பட்டது.

* அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கானச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

* இஸ்லாமியர்களுக்கு கல்வி-வேலை வாய்ப்புகளில் 3.5% தனி இடஒதுக்கீடு, அருந்ததியர் சமுதாயத்தினருக்கு 3% உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

* அரவாணிகள் என அழைக்கப்பட்டவர்கள் திருநங்கைகள் எனப் பெயர் மாற்றம் செய்து அவர்களுக்கென தனி நல வாரியம் அமைக்கப்பட்டது.

* 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 108 ஆம்புலன்ஸ் இலவச சேவைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

* 2009-ஆம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி முதல் கலைஞர் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

* தமிழகத்தில் டைடல் பார்க் இவரது ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.

* சென்னையில் செயல்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் திட்டம் தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். ரூ.14,600 கோடி மதிப்பிலான இந்த திட்டம் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முயற்சியால் கொண்டு வரப்பட்டது.

* கோயம்பேடு பஸ் நிலையம், கோயம்பேடு மார்க்கெட் என்று அனைத்தும் அவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள்.

* சிப்காட் தொழில் வளாகங்கள் அமைத்தது

* கோவை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழங்கள்

* பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அமைத்தது

* மதுரை மாநகரில் உயர்நீதிமன்ற கிளை அமைப்பு

* 2006க்கு பின் ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர், புதுக்கோட்டை, தேனீ, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய இடங்களில் அரசின் புதிய கலை அறிவியல் கல்லூரிகள்

* மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி,சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை, ஆகிய இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள்

* தொழிற்கல்வி பட்டபடிப்புக்காண நுழைவு தேர்வு ரத்து

* அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லாத திண்டிவனம், விழுப்புரம், அரியலூர், பண்ருட்டி, திருக்குவளை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சை, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள்

* தமிழகத்தில் உள்ள 4,676 கிலோமீட்டர் தேழிய நெடுஞ்சாலைகளில் 3,226 கிலோமீட்டர் சாலைகள் நான்கு வழி சாலைகளாக மாற்றப்பட்டன.

* ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, ஆகிய நான்கு நகராட்சிகள், மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டன.

* அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்களாக உதயம்.

* தருமபுரி மாவட்டத்தில் ஆரூர் புதிய கோட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம் புதிய கோட்டம், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைபேட்டை புதிய கோட்டம் என மூன்று புதிய கோட்டங்கள்.

* 369 கோடி ரூபாய் மதிப்பினாலான தாம்பிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு திட்டம்

* மாநிலத்திற்குள் பாயம் ஆறுகளை இணைக்கும் புரட்சிகர திட்டத்தின் கீழ் 169 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவேரி – குண்டாறு இணைப்பு திட்டம்.

* சேலம் உருக்காலை திட்டம்

கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மின் திட்டம்:

13-8-2007-வல்லூர் 1-ம் அலகு – 500 மெகாவாட்

2,3ம் அலகு -1000 மெகாவாட்

18-2-2008-வட சென்னை 1ம் அலகு – 600 மெகாவாட்

2ம் அலகு – 600 மெகாவாட்

25-6-2008-மேட்டூர் – 600 மெகாவாட்

28-1-2009-தூத்துக்குடி-1,2ம் அலகு – 1000 மெகாவாட்

* மின்பற்றாக்குறையை போக்க மொத்தம் 4300 மெகாவாட்டில் 8 மின்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

* மத்திய அரசு நிதி உதவியுடன் தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு 2007-2008ஆம் ஆண்டு முதல் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

* 1973இல் உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் தி.மு.கழக ஆட்சியில்தான்.

* 1974இல் சென்னை அண்ணா சாலை அரசினர் மகளிர் கல்லூரிக்கு “காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி” எனப் பெயர் சூட்டப்பட்டது. இவையெல்லாம் கருணாநிதி ஆட்சியின் சாதனைகளாக உள்ளன. அரசியலில் மட்டுமல்லாது திரைத் துறையிலும் வெற்றிகரமான கதையாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் கருணாநிதி விளங்கினார்.

இப்படி அரசியலில் மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் தனி பாதை வகுத்து சாதித்த வசனகர்த்தா-வும் இவரே என்பது மிகையல்ல.. கலைஞர் கருணாநிதியின் `பராசக்தி’, `மந்திரிகுமாரி’ பட வசனங்ககள் தமிழ் சினிமாவில் புதிய பாதையை உருவாக்கின. . அவரின் வசனங்கள்தான் அன்றைய அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆயுதமாக இருந்தது. தி.மு.க-வை பட்டிதொட்டி எங்கும் கொண்டுசென்ற பெருமையில் கருணாநிதியின் வசனங்களுக்கு நிச்சயம் பெரிய பங்குண்டு. இப்படி தான் சென்ற பாதையெல்லாம் தனி முத்திரை பதித்த தானைத் தலைவர் கருணாநிதி உடல் மறைந்தாலும் அவரது சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும் என்று நம்புகிறேன், அத்துடன் தமிழின் தலைமகன் கலைஞ்ர் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து அன்னாரது மறைவால் துயரத்தில் வாடும் குடும்பத்தாரின் துக்கத்தில் நானும் என் குடும்பமும் பங்கு கொள்கிறேன்.Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *